செந்துறையில் முகாமிட்டுள்ள சிறுத்தை பிடிக்க தீவிர ஏற்பாடு

செந்துறையில் முகாமிட்டுள்ள சிறுத்தை பிடிக்க 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியலூர், ஏப்.12- அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பின்புறம் நேற்று இரவு சிறுத்தை ஒன்று குதித்து ஓடும் காட்சியை அங்கே இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், மருத்துவமனையின் பின்புறம் சிறுத்தை நடமாட்டம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இரவில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று எச்சரித்தனர்.

மேலும் தர்மல் ஸ்கேனர் மூலம் சிறுத்தையின் உடல் வெப்பத்தைக் கொண்டு, அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை மாவட்ட வனத்துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடர்ந்து உள்ளனர். மயிலாடுதுறை வனத்துறையினரிடம் ட்ரோன் கேமரா, வெப் கேமரா ஆகியவை கொண்டுவரப்பட்டு சிறுத்தை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்படும் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளையும் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா விடுத்துள்ள செய்தி குறிப்பில், செந்துறை நகரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தேவை இன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், தங்களது ஆடு மாடுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இரவில் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருபவர்கள், குழுவாகவும், கையில் டார்ச் லைட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வைத்துக்கொண்டு நடமாட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story