இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - சீமான் ஆதரவு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - சீமான் ஆதரவு

சீமான்

சம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என நாதக தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் ஆசிரியப் பெருமக்கள் தங்களின் நியாயமான கோரிகைக்காக சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியப் பெருமக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர் பெருமக்கள் கடந்த 26.04.2018 அன்று சென்னை – வள்ளுவர்கோட்டம் அருகேயுள்ள மகளிர் பள்ளி வளாகத்தில் முன்னெடுத்த தொடர்போராட்டத்தில் சீமான் பங்கேற்றார். மீண்டும் 27-12-2018 அன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் ஆசிரியப் பெருமக்கள் முன்னெடுத்த அறவழிப்போராட்டத்திலும் நேரில் பங்கேற்று ஆதரவளித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டும் தமிழ்நாடு அரசு குறைவான ஊதியம் வழங்கி வருவது சிறிதும் அறமற்ற செயலாகும். ஆட்சிக்கு வந்தவுடன் சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் தொடர்ச்சியாக திமுக அரசு ஏமாற்றி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தங்களின் நியாயமான உரிமைக்காகப் போராடிவரும் ஆசிரியப்பெருமக்களின் கோரிக்கை வெல்ல நாம் தமிழர் கட்சி தமது முழுமையான ஆதரவை அளிக்கிறது. ஆகவே, நாட்டின் வருங்காலத் தலைமுறையைச் செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர் பெருமக்களை இனியும் வாட்டி வதைக்காமல், ஊதியப் பாகுபாட்டைக் களைந்து, அனைத்து இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கும் சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.'' என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story