10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை சொந்தமாக்கி உள்ளதாக தகவல்!!

10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை சொந்தமாக்கி உள்ளதாக தகவல்!!

fishermen

10 ஆண்டுகளில் ரூ.150 கோடி மதிப்பிலான தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை சொந்தமாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-இலங்கை இடையே நாகப்பட்டினம் முதல் ராமேசுவரம் வரை உள்ள கடல் பகுதி 25 முதல் 40 கி.மீ. வரை மட்டுமே அகலம் உள்ள கடற் பகுதியாகும். மீன்வளம் மிக்க இப்பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் தங்களது பகுதிகளில் மீன் பிடித்து வருகின்றன. இந்த நிலையில் அகலம் குறைந்த பகுதி என்பதாலும், பாரம்பரியமாக மீன்பிடி தொழில் நடக்கும் பகுதி என்பதாலும் இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் சம்பவங்களும், அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நடப்ப துண்டு. எனினும் சமீப காலமாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை அரசு வெளிநாட்டு மீன்பிடி சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வந்தது. இதில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2½ ஆண்டுகள் வரை சிறை தண்டனை மட்டுமின்றி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்குதல் போன்ற கடுமையான ஷரத்துகள் இடம் பெற்றிருந்தன. இந்த சட்ட திருத்தம் கொண்டு வந்த பின் தமிழக மீனவர்கள் கைது சம்பவங்களும், படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமை ஆக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் தமிழக மீனவர்கள் கைது மற்றும் அவர்களின் படகுகள் நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின்படி 2014-ல் 787 பேர், 2015-ல் 454 பேர், 2016-ல் 290, 2017-ல் 453, 2018-ல் 148, 2019-ல் 203, 2020-ல் 59, 2021-ல் 159, 2022-ல் 237, 2023-ல் 230, 2024 ஜூலை வரை 268 பேர் என இதுவரை 3,288 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதேபோல் 2014-ல் 164 படகுகள், 2015-ல் 71 படகுகள், 2016-ல் 51, 2017-ல் 84, 2018-ல் 14, 2019-ல் 41, 2020-ல் 9, 2021-ல் 19, 2022-ல் 34, 2023-ல் 34, 2024-ல் 39 படகுகள் என மொத்தம் 558 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 365 படங்களை அந்நாட்டு அரசு நீதிமன்ற உத்தரவுபடி நாட்டுடமையாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் படி இந்த விவரங்கள் கிடைத்துள்ளது. அங்கு 193 படகுகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தாலும் அவற்றில் 21 படகுகள் விடுவிக்கபட்ட பின்னரும் மீதி படகுகள் அங்கேயே உள்ளன. இவற்றை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story