ஜெயக்குமார் மரண வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

ஜெயக்குமார் மரண வழக்கு: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

ஜெயக்குமார் (பைல் படம் )

நெல்லை காங்கிரஸ் தலைவர் மர்மமான முறையில் இறந்த வழக்கில் தூத்துக்குடியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். கடந்த 4-ந் தேதி ஜெயக்குமார் தனசிங் தனது தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக 11 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் ஜெயக்குமார் தனசிங்கின் குடும்பத்தினரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி உள்ளனர்.

இதற்கிடையே போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை அடிப்படையாக கொண்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு குழுவினர் நேற்று கரைசுத்துபுதூருக்கு சென்றனர். அங்கு தோட்ட பணியாளர்கள், உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே தனிப்படை போலீசாரிடம் தெரிவித்த தகவல்களையும், தற்போது கூறிய தகவல்களையும் ஒப்பிட்டு அதை பதிவு செய்து கொண்டனர். அதில் ஏதேனும் முரண்பாடு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.மேலும் மற்றொரு குழுவினர் நேற்று தூத்துக்குடிக்கு சென்றனர். அதாவது ஜெயக்குமார் தனசிங் இறந்தபோது அவரது மனைவி ஜெயந்தி தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசில் வாக்குமூலம் அளித்து இருந்தார். அதை உறுதி செய்வதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று தூத்துக்குடிக்கு சென்று விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story