பட்டுக்கோட்டை: காவல்துறையினரை முற்றுகையிட்ட நகை வியாபாரிகள்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித் தெருவில், நகை கட்டிங் தொழில் செய்து வருபவார் ராஜ்குமார். இவர் திருட்டு நகைகளை வாங்கியதாக கூறி சனிக்கிழமை காலை திருச்சி ரயில்வே குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமலைராஜன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணைக்காக வந்தனர். இதையடுத்து ராஜகுமாரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், அவரை தங்கள் வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது, தேரடி தெருவில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள், ரயில்வே காவல்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், நகைக்கடை வியாபாரிகள் சங்க தலைவர் பெருமாள் உள்ளிட்ட வியாபாரிகள், ரயில்வே காவல்துறையினரை கோவில் ஒன்றில் அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் வருவது கண்டனத்திற்குரியது. இந்த செயலை காவல்துறையினர் கைவிட வேண்டும் என கூறி கடைகளை ஒரு மணி நேரம் அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் ராஜ்குமாரை விட்டு விட்டுச் சென்றனர். கடந்த ஜூன்.22 ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ராஜசேகரன் என்பவர் திருட்டு நகையை வாங்கியதாக திருச்சி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், ராஜசேகரன் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.