ஜிகே வாசன் அறிக்கை

ஜிகே வாசன் அறிக்கை

ஜிகே வாசன் 

தமிழக அரசு, கேரளாவில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் கேரள அரசைக் கண்டித்து, தடுப்பணைக் கட்டுவதை முறியடிக்க வேண்டும் என ஜிகே வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் வெளிட்டுள்ள அறிக்கையில் கேரள அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது. கேரள அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த முன்வராத தமிழக அரசின் செயல் முறையற்றது.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைக் கட்ட முயற்சிக்கிறது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீர் தடைபடும். அமராவதி அணையின் மூலம் கிடைக்கும் நீரானது குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் அமராவதி அணைக்கு வரும் நீரானது தடைபட்டால் தமிழக விவசாயிகளும், பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதனை தமிழக அரசு முக்கியப் பிரச்சனையாக கருதவில்லை. காரணம் தமிழக அரசு கூட்டணிக்காக, அரசியல் கண்ணோட்டத்தோடு கண்டும் காணாமல் இருப்பது தான். குறிப்பாக கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் கேரள அரசின் செயலை தமிழக அரசு கண்டிக்க வேண்டும்.

அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும். எனவே தமிழக அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழக விவசாயிகள், தமிழக மக்கள், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றை முக்கிய கவனத்தில் கொண்டு கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டும் முயற்சியை முறியடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன்.

Tags

Next Story