நெல் இயந்திர நடவு செய்துள்ள வயல்களை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு
ஸ்ரீராமன் கிராமத்தில் அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலையா நெல் இயந்திர நடவு செய்துள்ள வயல்களை ஆய்வு செய்தார்.
அரியலூர் மே.24 - ஆண்டிமடம் வட்டாரம் ஸ்ரீராமன் கிராமத்தில் அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாலையா நெல் இயந்திர நடவு செய்துள்ள வயல்களை ஆய்வு மேற்கொண்டார். ஸ்ரீராமன் கிராமத்தில் நெல் TPS 5 ரக சான்று நிலை விதைப் பண்ணை அமைத்துள்ள பிரியா என்பவரது வயலை ஆய்வு செய்து களைச்செடிகள் மற்றும் கலவன்களின்றி பராமரிக்க அறிவுறுத்தினார். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு செய்துள்ள வயல்களை ஆய்வு செய்து கோனோ வீடர் களைக்கருவி கொண்டு களை எடுக்க கூறினார். இக்கருவியை பயன்படுத்தும் போது களைச்சொடிகள் மடக்கி உழப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது.
மேலும் நெற்பயிரில் புதிய வேர் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது என்று கூறினார்.சிலுவைச்சேரி கிராமத்தில்" ஒரு கிராமம் ஒரு பயிர் செயல் விளக்க திடலில் "ஆய்வு செய்தார். ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் ஒரு பயிர் என்ற விதத்தில் 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத்திடல் அமைக்கப்பட்டு வருவதாக கூறினார். இச்செயல் விளக்க திடலிகளில் அனைத்து தொழில்நுட்பங்களையும் செயல்படுத்தி 15 முதல் 20 சதவீதம் கூடுதல் உற்பத்தி பெறப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை முறைகளை கடைபிடிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, உதவி விதை அலுவலர் குமார பாண்டியன், வேளாண்மை உதவி அலுவலர்கள் பழனிவேல், நித்தீஸ்வரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.