கலைஞர் நூற்றாண்டு நிறைவு வரலாற்று புகைப்பட கண்காட்சி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். உடன் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புகைப்பட கண்காட்சியை திறந்த வைத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டு இறுதியாக திமுக நிர்வாகிகள் உடன் ஒரு குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த புகைப்பட கண்காட்சியானது இன்று முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1934 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி தனது சிறு வயது முதல் வாழ்நாளில் அரசியல் வாழ்வில் பயணித்த பல நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை கருப்பு வெள்ளை புகைப்படங்கள் முதல் கலர் புகைப்படங்கள் ஒரு சில ஓவிய டிஜிட்டல் பிரிண்டுகளும் இடம் புகைப்பட கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி தொடங்கிய இந்த கலைஞர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஓராண்டு முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை திமுக கட்சி சார்பிலும், அரசு சார்பிலும் நலத்திட்ட உதவிகள், கண்தான முகாம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அதன் ஒரு பகுதியாக இந்த புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் கலைஞர் பெரியார், அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் உள்ளிட்ட பல தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச்செயலளார் ஆர்.எஸ்.பாரதியிடம் எழுப்பிய, பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவது குறித்தான கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரை அதை பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டது. இது விதிமீறலா இல்லையா என்பது பற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும். உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை திமுகவின் கோரிக்கையும் அதுதான் என தெரிவித்தார்.