கலைஞரின் கனவுத் திட்டம் ராக்கெட் ஏவுதளம் : கனிமொழி எம்பி

கலைஞரின் கனவுத் திட்டம் ராக்கெட் ஏவுதளம் : கனிமொழி எம்பி

கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவிருப்பது கருணாநிதியின் கனவுத் திட்டங்களில் ஒன்று என கனிமொழி எம்பி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வருகிற 28ஆம் தேதி தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்திலிருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் ராக்கெட் ஏவ சிறந்த இடம் மற்றும் எரி பொருள் என பல்வேறு வழிகளில் மிகச்சிறந்த இடமாகத் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது..

இதையடுத்து அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத் திட்டம் வருவதன் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி,வேலை வாய்ப்புகள் பெருகும் என ஆலோசித்து,இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடியிலுள்ள குலசேகரப்பட்டிணத்தில் அமைக்க வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டார் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி.

இதற்காக,பிரதமர் நரேந்திரா மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரையும் சந்தித்து வலியுறுத்தினார். குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதன் மூலம் எரிபொருள் செலவினங்கள் மற்றும் விண்வெளியில் இலக்கை ராக்கெட் அடைவதற்கான நேரம் குறைவு உள்பட என்னென்ன நன்மைகள் இருக்கும் என்பதைத் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து காரணிகளையும் சுட்டிக்காட்டி மோடியிடம் விவரித்தார் கனிமொழி எம்.பி. அவர்களின் சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தினார். கனிமொழியின் முயற்சியை புறக்கணித்து விடாமல் பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட ஒன்றிய அரசு,ராக்கெட் ஏவுதளம் அமைக்க அனைத்து வழிகளிலும் குலசேகரப்பட்டினம் சிறந்த இடம் எனத் தேர்வு செய்து,ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தைத் தமிழகத்தில் அமைக்க தீர்மானித்தனர். இந்த திட்டத்தை கொண்டு வரக் கனிமொழி கருணாநிதி எடுத்த பலகட்ட முயற்சிகளைப் பாராட்டினார் பிரதமர் மோடி.

திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பியின் தொடர முயற்சியால் கலைஞர் கருணாநிதியின் மாபெரும் கனவுத் திட்டமான குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நினைவாகிறது. குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் வந்த வரலாறு: 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி அவர்கள் கலைஞரின் கடிதத்தைக் குறிப்பிட்டு, ஏவுதளம் வேண்டுமென மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பாஜக ஆட்சியமைத்து முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏவுதளம் வேண்டுமென வலியுறுத்திய கனிமொழி எம்.பி பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார்.

2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கனிமொழி எம்.பி கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாக அளித்தார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின்னர் மக்களவையில் நவம்பர் மாதம் 7 தேதி மீண்டும் கோரிக்கை வைத்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் 8ஆம் தேதி, ஒன்றிய அரசு ஏவுதளம் அமைத்திட ஒப்புதல் வழங்கியது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதி குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

இதன் மூலம், கனிமொழி கருணாநிதியின் தொடர் முயற்சியின் காரணமாக கலைஞர் கருணாநிதி அவர்களின் கனவுத் திட்டமான குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைகிறது. குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருவதையொட்டி, அப்பகுதியில் வான்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2000 ஏக்கர் பரப்பளவில், புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்குக் கனிமொழி எம்.பி தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story