திருச்செந்தூா் கோயிலில் கலச மாற்று பூஜை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விசாகம் நிறைவு பெற்றதையடுத்து கலச மாற்று பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப் பெற்ற வைகாசி விசாகத் திருவிழா கடந்த 13ஆம் தேதி வசந்த திருவிழாவாக தொடங்கி கடந்த 22ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவாக நிறைவு பெற்றது.
இதைத் தொடா்ந்து, கோயிலில் கலச மாற்று பூஜை நேற்று நடைபெற்றது. இதற்காக திருக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30க்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகளைத் தொடா்ந்து கலச மாற்று பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இதனிடையே, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் கடலில் சுழல் அலை வீசுகிறது. எனவே, கடலில் ஆழப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என திருக்கோயில் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை மதியம் ஒலிப்பெருக்கியில் அறிவித்தனா். அதைத்தொடா்ந்து பக்தா்கள் கரையோரத்தில் புனித நீரானா்.