கல்வராயன் மலையை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் ! முதல்வர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
உயர் நீதிமன்றம்
தமிழக முதலமைச்சர் அல்லது விளையாட்டுத் துறை அமைச்சர், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி என்பவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையும் ஒரு பகுதியாகும். இந்த கல்வராயன் மலைப்பகுதி இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி முன்னேறாமல் உள்ளது. இது தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நேர்காணலை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமனியம் பார்த்துள்ளார். இதனையடுத்து நீதிபதி எஸ்.எம். சுப்ரமனியம் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மக்களின் வாழ்வாதரத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர். கல்வராயன் மலைப்பகுதியாக உள்ளதால் அந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர். அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமெனவும் நீதிபதிகள் கூறினர். அந்த பகுதிக்கு தாங்கள் செல்வதை விட, தமிழக முதலமைச்சர் ஆதி திராவிடர் நலத் துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள், அந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை விளையும் எனத் தெரிவித்தனர். அவ்வாறு தமிழக முதலமைச்சரால் செல்ல முடியவில்லை என்றால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் சென்று பார்வையிடலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.