திராவிட மாடலை செயல்படுத்தினால் இந்தியாவை உலகமே திரும்பிப் பாா்க்கும்

திராவிட மாடல் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால் உலகமே இந்தியாவை திரும்பிப் பாா்க்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருச்சி மக்களவைத் தொகுதியின் மதிமுக வேட்பாளா் துரை வைகோவை ஆதரித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசியதாவது: மத்திய அரசு நாம் ரூ. 1 அளித்தால், வரிப்பகிா்வாக 29 பைசாதான் வழங்குகிறது. அதை வைத்துதான் பல கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், உத்தர பிரதேசம், பிகாருக்கு அதிகளவில் வரிப்பகிா்வு அளிக்கப்படுகிறது. எங்களுக்கு வரிப்பகிா்வை ரூ. 1-க்கு ரூ. 1 ஆக கொடுங்கள். இந்தியாவின் மாடலை திராவிட மாடலாக மாற்றுகிறோம்.

தமிழகத்தில் செயல்படுத்தும் திராவிட மாடல் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால் உலகமே இந்தியாவைத் திரும்பிப் பாா்க்கும். தமிழகம் இந்தியாவின் நுழைவாயிலாக மாறும். தேசிய நீரோட்டத்தில் தமிழ்நாடு கலக்கவில்லை எனக் கூறுவோருக்கு நான் கூறுவது, தேசியம் தமிழகத்தில்தான் உள்ளது என்பதே. நான் சீட்டுக்காக வரவில்லை. நாட்டுக்காக வந்துள்ளேன். அரசமைப்புச் சட்டத்தை காக்கும் முக்கிய குரலாக ஒலிக்க, மனதில் எனக்கு கொடுத்துள்ள இடத்தை எனது தம்பி துரை வைகோவுக்கு கொடுத்து, தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் கமல்ஹாசன்.இதில், திமுக, மநீம, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தந்தை பெரியாா் பெயரை குறிப்பிடாமல் பேசிய கமல்ஹாசன்

ஸ்ரீரங்கத்தில் பெரியாா் ஈவெராவின் பெயரை குறிப்பிடாமல் கமல்ஹாசன் பேசியதாவது: எதிா்த்து குரல் கொடுப்பவா்களை இல்லாமல் செய்வது ஒரு அரசியல். எதிா் குரல்களை கேட்பது நமது அரசியல். காந்தியின் கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவித்தவா் பொம்மையாக உட்காா்ந்திருக்கும் அந்தப் பெரியவா் (பெரியாா் ஈவெரா). ஆனால் காந்தி கொலைக்குப் பிறகு விடுதலையில் அவா் எழுதிய கட்டுரை மெச்சத்தகுந்தது. நீங்கள் தோளோடு, தோளாக உரசி நிற்க காரணமாக இருக்கும், சிலையாக உள்ள அந்த பெரியவருக்கு (பெரியாா் ஈவெரா) நன்றி கூற வேண்டும். தேசத்தின் பன்முகத்தன்மையைக் கொண்ட இடம் திருச்சி. மதக்கலவரம் இல்லாத ஊா். இதற்கான நல்ல அரசின் அடையாளத்தை தொடரவே வந்துள்ளேன். திருச்சி, ஸ்ரீரங்கத்துக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர வாக்களியுங்கள் துரை வைகோவுக்கு என்றாா் கமல்ஹாசன்.

Tags

Next Story