காஞ்சிபுரம்: திமுக எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினர் கைது

பாஜகவினர் கைது
கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை திறக்க பல்வேறு கிராமங்களுக்கு சென்று இருந்தார். அப்போது கீழ்கதிப்பூர் கிராம நியாய விலைக் கடையை திறந்து வைத்து அங்கு வந்திருந்த மகளிர் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என முற்றுகையிட்டு கேட்டனர். அதற்கு பதில் அளித்த எழிலரசன், பாரத பிரதமர் மோடி மற்றும் பாஜக நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட பாஜகவினர் எஸ் பி அலுவலகத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் பாபு தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் முற்றுகையிட முயன்றனர். அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களை கைது செய்ய கூடாது என பாஜகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
