கர்நாடக முதலமைச்சர் பெங்களூரு திரும்பினார்!
சித்தராமையா
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால் தேர்தல் பிரசாரம் முடிந்ததும் அரசியல் கட்சித் தலைவர்கள் குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். அண்டை மாநிலமான கர்நாடகாவின் முதல் கட்ட தேர்தல் கடந்த 26-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 7-ந் தேதியும் முடிந்தது.
பாராளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தேர்தல் பரப்புரை முடிந்து ஓய்வெடுக்க குளிர் பிரதேசமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 7-ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து ஊட்டி கேவ்லாக் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவிற்கு சென்று தங்கி ஓய்வெடுத்தார். இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று ஊட்டியில் உள்ள கர்நாடக அரசு தோட்டக்கலை துறை பூங்கா மற்றும் தமிழக அரசு தோட்டக்கலை துறை பூங்காவுக்கு காரில் சென்று சுற்றி பார்த்தார்.
இந்நிலையில் சுற்றுப்பயணம் முடிந்து இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் பெங்களூரு கிளம்பினார். முன்னதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாநில ஓ.பி.சி., பொது செயலாளர் லாரன்ஸ் உள்பட பலர் ஊட்டி தீட்டுக்கள் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று அவரை வழி அனுப்பினர்.