கர்நாடக நாடாளுமன்ற தேர்தல் - சம்பளத்துடன் விடுமுறை
பைல் படம்
குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கர்நாடக மாநிலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் மே 7ம் தேதி ஆகிய நாட்களில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 (பி)ன் படி கர்நாடக மாநில தேர்தல் நாளன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கர்நாடகா மாநில வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், இதர அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் நிரந்தரம், தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட அனைத்து கர்நாடகா மாநில வாக்குரிமை பெற்ற தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளரால் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி கர்நாடகா மாநில மக்களவை பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் மே 7ம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் கர்நாடக மாநில தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. விடுப்பு தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் 9443566160 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.