கார்த்திகை தீபம் : மதுரை மல்லி கிலோ ரூ.2200க்கு விற்பனை

மலர் வணிக வளாக கடை
திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதுரை மல்லிகையின் விலை கிலோ 2200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மலர் வணிக வளாகம். மதுரை மாவட்டத்திலுள்ள சிலைமான், அலங்காநல்லூர், பாலமேடு வாடிப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் விளையும் பல்வேறு வகையான பூக்கள் இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அண்டை மாவட்டங்களான ராமநாதபுரம் விருதுநகர் தேனி திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பல்வேறு வகையான பூக்கள் இங்கே கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக மதுரை மல்லிகை அதன் தனித்தன்மை மணம் ஆகியவை காரணமாக உலகளாவிய சந்தை வாய்ப்பு பெற்று திகழ்கிறது. மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகை வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. இந்த நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர்சந்தையில் மதுரை மல்லிகை பூ - நேற்று 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2200ரூபாயாக விலை உயர்ந்தது. முல்லைப்பூ நேற்று 800க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய்,கனகாம்பரம் பூ நேற்று 800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1200 விற்பனை செய்யப்பட்டுவருகிறது. பிச்சி பூ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1000ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சம்மங்கிப்பூ 150ரூபாய்க்கும், மெட்ராஸ் மல்லி 800ரூபாய்க்கும், அரளி 400ருபாய்க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
