கொடைக்கானல் : குணா குகையைக் காண வந்த ஒரிஜினல் மஞ்சுமோல்பாய்ஸ்
ஒரிஜினல் மஞ்சுமோல்பாய்ஸ்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான குணா குகையினை காண கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த 10 இளைஞர்கள் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர், இதில் குறிப்பாக சுபாஷ் என்பவர் மட்டும் குணா குகை பள்ளத்தாக்கு பகுதியில் தவறி விழுந்துள்ளார், அதன் பின்னர் அவருடன் வந்திருந்த குட்டன் என்பவர் குகை பள்ளத்தில் விழுந்த தனது நண்பனை உள்ளே இறங்கி கயிறு கட்டி அவரை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தார், இந்த உண்மை சம்பவத்தை தற்போது மஞ்சுமோல் பாய்ஸ் என்று மலையாளத்தில் படமாக எடுத்து தற்போது பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து கொடைக்கானல் குணா குகைக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது, இந்த நிலையில் தற்போது தனியார் யூ டியூப் சேனலில் சிறப்பு படப்பிடிப்பிற்காக 2006 ஆம் ஆண்டு குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தில் இருந்த ரியல் மஞ்சுமெல் பாய்ஸ் குழுவினரை தற்போது கொடைக்கானலுக்கு அழைத்து வந்துள்ளனர், இதில் குறிப்பாக இந்த குழுவினர் குணா குகைக்கு நேரில் சென்று அவர்களின் அப்போதைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், அதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளுடன் இந்த குழுவினருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
மேலும் தமிழ் திரைப்பட நடிகரான முனிஷ்காந்த் இந்த ரியல் மஞ்சுமால் பாய்ஸ் குழுவினரை நேரில் சந்தித்து படம் மிகவும் அருமையாக இருந்தது எனவும் அதனை பார்க்கும் போது உங்களின் உண்மையான கஷ்டத்தை நான் உணர்ந்தேன் என்று கூறி அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.