குலசை தசரா திருவிழா - நாளை சூரசம்ஹாரம்

குலசை தசரா திருவிழா - நாளை சூரசம்ஹாரம்

குலசை தசரா திருவிழா

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி நாளை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். 8-ம் நாளான நேற்று இரவில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தென்மாவட்டங்களில் காணும் இடமெல்லாம் பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது. குலசேகரன்பட்டினம் கோவிலில் தசரா திருவிழாவின் 9-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு அன்னவாகனத்தில் கலைமகள் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார். விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிகின்றனர்.

Tags

Next Story