காடெஹெத்தையம்மன் காேவில் கும்பாபிஷேகம்

கீழ்குந்தா காடெஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே கீழ்குந்தாவில் காடெஹெத்தையம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் 'தெவ்வஹப்பா' என்று அழைக்கப்படும் அறுவடை திருவிழா நடைபெறும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் குந்தை சீமைக்கு உட்பட்ட 14 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று காணிக்கை செலுத்தி வழிபாடு நடத்துவார்கள். கடந்த 10 ஆண்டுகளாக கோவில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு, வழக்கம்போல் திருவிழா கொண்டாடப்பட வேண்டுமென சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்தனர்.

கடந்த சில நாட்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. எனவே, பணிகளை முழுமையாக முடித்து வேறு ஒரு தேதியில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திட்டமிட்ட தேதியில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் ஊட்டி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி தலைமையில் 40 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று காலை கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில், குந்த சீமைக்கு உட்பட்ட கீழ்குந்தா, தூனேரி, மட்டக்கண்டி, பாக்கோரை, மணிக்கல், மஞ்சூர் ஹட்டி, கரியமலை, கெரப்பாடு, முள்ளிகூர், முக்கிமலை, பிக்கட்டி, ஒசட்டி, எடக்காடு, காந்திகண்டி ஆகிய ஊர்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பாரம்பரிய ஆடை உடுத்தி பங்கேற்று, ஹெத்தையம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர்.

Tags

Next Story