சாலைகளில் மலர்மாலைகள், மலர்வளையங்களை வீசினால் சட்ட நடவடிக்கை
பைல் படம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் வீசப்பட்ட மலர் மாலையின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி வழுக்கி விழுந்து ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக கடந்த 2022-ம் ஆண்டு அன்பு செல்வன் என்பவர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையாக வைத்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தியது. இறுதி ஊர்வலங்கள் தொடர்பாக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது, இறந்தவரின் உறவினர்கள், இறுதி ஊர்வலம் எப்போது? எந்த பாதை வழியாக செல்லும் என்பதை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இறுதி ஊர்வலத்தின்போது, அதிக அளவில் மாலைகள், மலர்வலையங்களை கொண்டுச் செல்லக்கூடாது. சாலைகளிலும் வீசக்கூடாது. மரணம் குறித்து அறிவிப்பு விளம்பர பலகை, பேனர்கள் வைக்கக்கூடாது. நெடுஞ்சாலை, பிரதான சாலைகள், உயர்மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலத்தை நடத்துவதை உறவினர்கள் தவிர்க்கவேண்டும். இறுதி ஊர்வலம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், காவல்துறை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் காவல்துறை நிபந்தனைகளை மீறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற டிஜிபியின் சுற்றறிக்கையை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.