நெகிழ்ச்சி சம்பவம்: ஆட்டோவில் ஏற்றிச் செல்லப்பட்ட கன்றை 5 கி.மீ பின் தொடர்ந்த தாய் பசு
கன்றுவை பின்தொடர்ந்த பசு
தஞ்சாவூர் செக்கடிப் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் சிவகங்கை பூங்கா பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது வீட்டில் லட்சுமி என்ற பசுவை செல்லமாக வளர்த்து வந்தார். காலையில் பசுவை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வழக்கம், கன்று ஈனும் பருவத்தில் நிறைமாத கர்ப்பமாக இருந்த பசு மாடு தொம்பன் குடிசை பகுதி அருகே மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த இடத்திலேயே பசுமாடு கன்று குட்டியை ஈன்றது. இதையடுத்து வழக்கம்போல் மாடு, வீடு திரும்பாமல் அதே பகுதியிலேயே நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெகுநேரமாக பசு வீட்டிற்கு திரும்பி வராததால் உரிமையாளர் சபரிநாதன் தன்னுடைய பசுமாட்டை பல்வேறு இடங்களில் தேடி அலைந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு பசுமாடு நின்றதை கண்ட அவர் பசு மாட்டை தடவிக் கொடுத்து, கன்று ஈன்றதை அறிந்து அதன் கன்றை ஆட்டோவில் ஏற்றியபடி வீட்டில் விட்டுவிட்டு, மீண்டும் வந்து பசுமாட்டை அழைத்துச் செல்ல திட்டமிட்டார்.
இதற்காக கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றி அங்கிருந்து நகர்ந்து சென்றார். கன்றுக் குட்டியை பிரிய மனம் இல்லாத அந்த பசுமாடு ஆட்டோவை பின் தொடர்ந்து வெகு வேகமாக ஓடியது. பின்பு வீட்டில் சென்று கன்று குட்டியை இறக்கி விட்டதும், பசுமாடு ஓடி வந்து கன்று குட்டியை தன் நாவால் நக்கி அன்பை வெளிப்படுத்தியது. இந்த பசுமாட்டின் பாசப் போராட்டம் அப்பகுதியில் இருந்தவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.