மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் நியமனம்

தாயுடன் அமைச்சர் 

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவல் குழுவின் தலைவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில் ருக்மணி எப்படி அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அதன்பிறகு அவரது இலாகா மாற்றம் செய்யப்பட்டது. நிதித்துறை அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது.

பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது. தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜ் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர் மதுரையை சேர்ந்தவர். மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு 2வது முறையாக திமுக எம்எல்ஏவாக இருக்கிறார். இத்தகைய சூழலில் மதுரையில் பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அறங்காவலர் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மொத்தம் 5 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மதுரை அண்ணாநகரை சேர்ந்த மூக்கணம்பலம் என்பவரின் மகன் பிகேஎம் செல்லையா, மதுரை காந்திநகர் சூமேக்கர் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகள் சுப்பலட்சுமி, சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் என்பவரின் மகள் ருக்மணி பழனிவேல்ராஜன், மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மு சீனிவாசன், மதுரை அரசரடி ஹார்விநகர் 4வது தெரு எம் சேகர் மகள் எஸ்.மீனா ஆகிய 5 பேர் கோவில் அறங்காவலர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இதில் ருக்மணி பழனிவேல் ராஜன் என்பவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ஆவார். இவருக்கு வயது 83 ஆகும் நிலையில் அறங்காவலர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் டிசம்பர் 1ம் தேதி அறங்காவலர் உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

அப்போது அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடைபெறவில்லை. இதற்கிடையே தான் அறங்காவலர் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான காலஅவகாசம் என்பது நிறைவு பெற்றது. இதனால் அரசே அறங்காவலர் குழு தலைவரை தேர்வு செய்யும் என கூறப்பட்டது. அதன்படி தற்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி போட்டியின்றி மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ''மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு செய்வதற்கான காலஅவகாசம் முடிந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலைக்கொடைகள் சட்டப்பிரிவு 48ன் கீழ் அறங்காவலர் குழு தலைவர் அரசின் மூலம் தேர்வு செய்ய மதுரை இணை ஆணையர் பரிந்துரைத்தார். இதையடுத்து அறங்காவலர் குழு செயல்பாடுகள் தொடர்பான விதிகளில் விதி 18ஏ-ன்படியும் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்குழுவின் தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜனை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story