மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் பிரச்சாரம்
பல மொழிகள் கொண்ட இந்திய தேசத்தை பாஜக அழிக்க துடிப்பதாக அரியலூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் பேசினார்.
அரியலூர், ஏப். 8- பல மொழிகள் பேசும் மக்கள் கொண்ட இந்திய தேசத்தை பாஜக அழிக்க துடிக்கிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன். சிதம்பரம் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவனை ஆதரித்து அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: இந்திய எப்படி ஒரு பெரிய நாடாக உள்ளதோ அவ்வாறு இந்திய கூட்டணியும் பெரியது. பாஜகவை வீட்டுக்கு அனுப்ப பல்வேறு காரணங்கள் உள்ளன. காங்கிரûஸ வீட்டுக்கு அனுப்ப ஒரு காரணம் உண்டா? இந்தியாவுடன் மோத எந்த நாட்டுக்கும் தைரியம் இல்லை. அப்படிபட்ட இந்தியாவுக்கு பிரதமராக 10 ஆண்டுகள் இருந்த மோடி மக்களுக்கு என்ன செய்தார். பிரசாரத்துக்கு வரும் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கு ஏதும் செய்யவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த100 நாள் வேலை திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக அதனை 32 நாள்களாகவும், இதற்கான நிதியையும் குறைத்துள்ளார்கள். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் 32 நாள் வேலையை 3 நாள்களாக கூட மாற்ற வாய்ப்புள்ளது. மத்திய பாஜக அரசு உரிய நிதியை தமிழகத்துக்கு வழங்கவில்லை. பெண்களின் வளர்ச்சிக்கு மாநில அரசு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கி வருவதை மத்திய அரசு எண்ணி பார்க்க வேண்டும். இதனை குறை சொல்லும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது தரவேண்டியது தானே. குறைச் சொல்வதே எடப்பாடி பழனிசாமியின் வேலை. மத்திய அரசுடன் அங்கம் வகித்த எடப்பாடி பழனிசாமி மத்திய அரசியிடமிருந்து பணத்தை பெற்று பெண்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டியது தானே. 10 ஆண்டு கால ஆட்சியில் மோடி இதுவரை ஒரு ரூபாய் கூட விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. அம்பானி, அதானிக்கு தான் ரூ.17 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். அவரது ஆட்சியில் டீசல், பெட்ரோல், காஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கிடு, கிடு என உயர்ந்து விட்டது. இதனால் மக்கள் பசி, பட்டினியில் வாடி கொண்டிருக்கின்றனர். உலக கணக்கெடுப்பில் பசி பட்டினியில் வாழும் மக்கள் இந்தியாவில் தான் உள்ளனர் என தெரிந்தபோது மோடி என்ன செய்தார். மாநில உரிமைகளை பறிப்பது தான் மோடியின் முதல் வேலை. ராமர் கோயிலை கட்டுவதா பிரதமரின் வேலை?. நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேட்டால் ராமர் கோயில் கட்டினோம் என்கிறார். ராமர் கோயிலை கட்டி ராமரை வாக்கு சேகரிக்க பயன்படுத்துகிறார். பல மொழி பேசும் மக்கள் கொண்ட இந்திய தேசத்தை பாஜக அழித்து வருகிறது. இப்படியே போனால் மதக் கலவரம் தான் ஏற்படும். எனவே, மோடியை வீட்டுக்கு அனுப்ப இந்திய கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் சங்கர், திமுக நகரச் செயலர் முருகேசன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ராமநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.