ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரலாற்றை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரலாற்றை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கலை இலக்கிய பாரம்பரிய மரபுகளுக்கு எதிராகவும், தமிழ்ப் பண்பாட்டையும் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பேசிய திருவள்ளுவரையும், ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்று பாடிய ராமலிங்க வள்ளலாரையும், மநுஅதர்ம, வர்ணாசிரம குடுவைக்குள் அடைக்க முயன்றார் ஆர்.என்.ரவி. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தற்போது வர்ணாசிரம அநீதிகளுக்கு எதிராகவும், பாலின சமத்துவத்திற்காகவும் பெரும் குரலெடுத்து பேசியதோடு மட்டுமின்றி, அதற்காகவே இயக்கம் கண்ட அய்யா வைகுண்டரையும் சனாதனவாதி என்று கூறத் துணிந்துள்ளார். ஆளுநர் வேலையை விட்டுவிட்டு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுநேர பிரச்சாரகராகவே மாறியுள்ள ஆர்.என்.ரவி, சாதி, சமய வேறுபாடுகள் கூடாது. மனிதர்கள் அனைவரும் சமம் என்று கூறிய வைகுண்டரை, சனாதனவாதி என்று கூறுவது அப்பட்டமான வரலாற்று திரிபு ஆகும். ‘தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்ற உயரிய நெறியை முன்வைத்த வைகுண்டர், ‘குடிபொருந்தி வாழ்ந்து கூடி இருந்திடுங்கோ’ என்று சாதி, மத வேறுபாடுகளுக்கு எதிராக சமத்துவ கருத்துக்களை முன்வைத்தவர்.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியில் நிலவிய சாதிய கொடுமைகளுக்கு எதிராக வெடித்தெழுந்து புறப்பட்டதே அய்யா வைகுண்டரின் இயக்கம். தீண்டாமை மட்டுமின்றி, பாராமையும், தோள்சேலை அணியத் தடை உள்ளிட்ட கொடுமைகளையும் வன்மையாக எதிர்த்தவர் அவர். அனைவரும் பொதுக் கிணறை பயன்படுத்த வேண்டும் என்று கூறியதோடு, வள்ளலாரைப் போன்றே கண்ணாடி முன்னின்று வழிபட்டால் போதும் என்றவர். சுருக்கமாகச் சொல்லப்போனால், ஆர்.என்.ரவி வகையறாவின் தத்துவங்களுக்கு நேர் எதிரான தத்துவம்தான் வள்ளுவர், வள்ளலார், வைகுண்டர், நாராயணகுரு, அய்யன்காளி போன்றவர்களின் கருத்தியல் ஆகும். ஆர்.என்.ரவி தன்னுடைய திருத்தல் வேலைகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும்.

வரலாற்றை அவர் தொடர்ந்து கொச்சைப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story