அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கிய மேயர்
விலையில்லா சைக்கிள் வழங்கல்
சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் 210 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ரவிசந்திரன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 210 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
தொடர்ந்து கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட 57-வது வார்டில் 2023-2024-ம் ஆண்டு பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் களரம்பட்டி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டும் பணியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அம்மாப்பேட்டை மண்டலம் 42-வது வார்டு நாராயண நகர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் தரைத்தளத்தில் 2 வகுப்பறை, முதல் தளத்தில் 2 வகுப்பறைகள் கட்டுமான பணி, 34-வது வார்டு திரு.வி.க சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ரூ.50 லட்சத்தில் வகுப்பறை கட்டுமான பணி என மொத்தம் மாநகராட்சி பகுதியில் ரூ.1½ கோடியில் பள்ளி வகுப்பறை கட்டுமான பணிகளை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன், மண்டலக்குழுத்தலைவர் அசோகன், பொது சுகாதார குழுத்தலைவர் ஏ.எஸ்.சரவணன், செயற்பொறியாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் இளங்கோ, மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.