மருத்துவ மாணவி தற்கொலை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

மருத்துவ மாணவி தற்கொலை: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பேராசிரியர்


மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் சுகிர்தா (27). தூத்துக்குடியை சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மாணவி சுகிர்தா, விடுதி அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது அறையில் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும் சுகிர்தா குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று சுகிர்தாவின் தந்தை சிவகுமார் மற்றும் பலர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் பரமசிவத்தை காவலில் எடுக்க வேண்டி, நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் அழைத்து வந்திருந்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சி.பி.சிஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் பேராசிரியர் பரமசிவம், தனக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாக தெரிகிறது. இன்று காலையும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். பேராசிரியர் பரமசிவத்தை குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். பிறகு மாலையில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story