தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தகவல் தொழில் நுட்ப மாநாடு
யுமாஜின் 2024 தகவல் தொழில் நுட்ப மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் பிப்ரவரி 23 - 24 ல் நடைபெற்றது. இம்மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடந்த இந்த மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு. ஆழ் தொழில்நுட்பம். இணையப் பாதுகாப்பு. நுண்ணறிவுத் தொடர்பு, நிலைத்தன்மை, உலகளாவிய புத்தாக்க மையங்கள், AVGC-XR ஆகியவை குறித்த பொருண்மைகளில் 60க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடைபெற்றன.
140க்கும் மேற்பட்ட ஆளுமைகள் இத்துறைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பல்வேறு தொழில் நுட்ப நிறுவனங்களின் 218 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றன. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன், அமெரிக்காவின் Sprinkler நிறுவனத் தலைவர் ரேகி தாமஸ், மேற்கு ஆஸ்திரேலியா சுகாதார மற்றும் மனநலத்துறை அமைச்சர் ஆம்பர் ஜேட் சாண்டர்சன், சென்னை இந்திய தொழில்நுட்பக்கழகத்தின் இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவு விழாவில் மதுரை மற்றும் திருச்சியில் மண்டலப் புத்தாக்க மையங்கள் உருவாக்குதல் மற்றும் 26 பொறியியல் கல்லூரிகளுடன் இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.