மினி நாடாளுமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக தோற்கும் என புதிய கருத்துக்கணிப்பு

மினி நாடாளுமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக தோற்கும் என புதிய கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

இம்மாதம் நடைபெற இருக்கிற 5 மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று புதிய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விரிவான தகவல்களை பார்ப்போம்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மினி நாடாளுமன்ற தேர்தல் போல தெலுங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இம்மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்ற கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் நடத்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் ஏபிபி சி ஓட்டர் நிறுவனம் நடத்திய இறுதி கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் வரும் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், சுமார் 44 சதவீத வாக்குகள் பெற்று

118 முதல் 130 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், சுமார் 42 சதவீத வாக்குகள் பெற்று 99 முதல் 111 தொகுதிகளில் பாஜகவும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு சுமார் 45 சதவீத வாக்குகள் பெற்று 114 முதல் 124 தொகுதிகளில் பாஜகவும் , குமார் 42 சதவீத வாக்குகள் பெற்று 67 முதல் 77 தொகுதிகளில் காங்கிரசும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மீசோரம் மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், தற்போது ஆட்சியில் உள்ள மீசோரம் தேசிய முன்னணி கட்சி 17முதல் 21 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்,ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி 10 முதல் 14 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி 6 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7ஆம் தேதியும், வரும்17ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு சுமார் 45 சதவீத வாக்குகள் பெற்று

45 முதல் 51 தொகுதிகளில் காங்கிரசும், சுமார் 43 சதவீத வாக்குகள் பெற்று 36 முதல் 42 தொகுதிகளில் பாஜகவும், 2 முதல் 5 இடங்களில் மற்றவர்கள் வெற்றிபெறுவார்கள் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 119 சட்டமறை தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமார் 41 சதவீத வாக்குகள் பெற்று பிஆர்எஸ் கட்சி 49 முதல் 61 தொகுதிகளிலும், சுமார் 39 சதவீத வாக்குகள் பெற்று 43 முதல் 55 தொகுதிகளில் காங்கிரசும், 14 சதவீத வாக்குகள் பெற்று 5 முதல் 11 தொகுதிகளில் பாஜகவும், மற்றவை 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் 5 மாநில தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கணிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்கர் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனவும், மிசோரம் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிப்பதாகவும் ஏபிபி சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story