மோடி அடிக்கடி வந்தாலும் செல்லுபடியாகாது - அமைச்சர் அன்பில் மகேஸ்

மோடி அடிக்கடி வந்தாலும் செல்லுபடியாகாது - அமைச்சர் அன்பில் மகேஸ்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் நிறைய மீனவர்களைச் சிறையில் அடைப்பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் நிகழ்கின்றன. இலங்கைக்கு பிரதமர் அடிக்கடி சென்று வந்தபோது இதைப் பற்றி பேசியிருக்கலாம். தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்தாலும் செல்லுபடியாகாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே தளவாய்ப்பாளையத்தில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர். சுதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தது:கச்சத்தீவு பற்றி 2015 - இல் பாஜகவினர் என்ன பேசினர் என்பது அனைவருக்கும் தெரியும். இதை விவாதப் பொருளாகக் கொண்டு செல்ல பார்க்கின்றனரே தவிர, அதில் நிகழ்ந்த உண்மை என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர் கருணாநிதி எப்போதுமே நம்முடைய உரிமையை விட்டுக் கொடுத்ததில்லை. இதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டுக் கொண்டு வராமல் இப்போது பேசுகிறார். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாகத்தான் மீனவர்கள் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் நிறைய மீனவர்களைச் சிறையில் அடைப்பதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் நிகழ்கின்றன. இலங்கைக்கு பிரதமர் அடிக்கடி சென்று வந்தபோது இதைப் பற்றி பேசியிருக்கலாம்.

ஆனால், அப்போது அதைப்பற்றி பேசாமல் இப்போது தேர்தல் வந்திருப்பதால் எல்லாமே கண்ணுக்கு தெரிகிறது. இதை மக்களும் குறிப்பாக மீனவர்களும் நன்கு உணர்த்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அவர்கள் போடும் வேடங்கள் எல்லாம் இந்தப் பெரியார் மண்ணில் எடுபடாது. கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுக்கு வராத பிரதமர் மோடி தேர்தல் வருவதால், ஜனவரி மாதம் முதல் இதுவரை 7 முறை வந்துள்ளார். அடுத்து ஏப்ரல் 9 ஆம் தேதி வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையிலும், தூத்துக்குடியிலும் பெருமழை காரணமாக ரூ. 37 ஆயிரம் கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதைக் கூறி உதவி செய்யுமாறு கோரினோம். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை. குஜராத்திலும், உத்தரகாண்டிலும் பேரிடர் ஏற்பட்டபோது உடனடியாக வாரி வாரி வழங்கப்பட்டது. ஆனால் எல்லா விதங்களிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து விட்டு, இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி வருவதால் செல்லுபடி ஆகாது" என்றார் அமைச்சர்.

Tags

Next Story