திருச்செந்தூர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்

திருச்செந்தூர் கோவிலில் சிங்கப்பூர் அமைச்சர் சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோவில் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாத சண்முகம் சாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். அதுபோல் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்நிலையில் நேற்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசி விஸ்வநாத சண்முகம் கோவிலில் சாமி தரிசனம் செய்து சென்றார்.

இதற்காக புதுச்சேரி காரைக்காலில் இருந்து நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி டி.சி.டபிள்யூ. நிறுவனத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடு தளத்தில் வந்து இறங்கினார். அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அவர் இரவில் தங்கினார். நேற்று காலையில் காரில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு அமைச்சர் காசிவிஸ்வநாத சண்முகம் சென்றார். கோவில் வளாகத்தில் வள்ளி குகை அருகே உள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜை செய்தார்.

பின்னர் கோவிலுக்குள் சென்று மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் காரில் ஆறுமுகநேரிக்கு வந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். இதற்காக பழனியில் உள்ள தனியார் பள்ளியில் பிரத்யேகமாக ‘ஹெலிபேட்’ அமைக்கப்பட்டு இருந்தது.அங்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகம், கார் மூலம் தண்டபாணி நிலையம் தங்கும் விடுதிக்கு சென்றார். அங்கிருந்து கோவில் பேட்டரி கார் மூலம் ரோப்கார் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் ரோப்கார் மூலம் பழனி மலைக்கோவிலுக்கு சென்றார். தொடர்ந்து உச்சிக்கால பூஜையில் பங்கேற்று அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ரோப்கார் மூலம் அடிவாரத்துக்கு வந்த அவர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story