அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று குமரி வருகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகிறார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (27ம் தேதி) வெள்ளிக்கிழமை குமரி மாவட்டம் வருகிறார். இன்று இரவு கன்னியாகுமரியில் ஓய்வெடுக்கும் அவர் நாளை (28ம் தேதி) சனிக்கிழமை குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நாளை காலை 9 மணிக்கு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் என்ற வகையில் வேர்க்கிளம்பி செல்லும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நூலக திறப்புவிழாவில் பங்கேற்று நூலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அழகியமண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெறுகின்ற குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெறுகின்ற மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழாவிலும் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதனை தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு நாகர்கோவில் கங்கா கிராண்டியூர் மண்டபத்தில் நடைபெறுகின்ற விழாவில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கி பேசுகிறார். பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகின்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி குமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Next Story