நெகிழ்ச்சியை ஏற்படுத்திய அமைச்சர் உதயநிதி
குறைகளை கேட்கும் உதயநிதி
திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெருந்துறையிலிருந்து கார் மூலம் சேலம் மாவட்டம் சங்ககிரி வழியாக சென்று கொண்டிருந்தார்.
சங்ககிரி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உதயநிதி ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் புகழ் ஆனந்த் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சங்ககிரி பகுதியைச்சேர்ந்த தங்கத்துரை, தனலட்சுமி தம்பதியரின் மகளான மாற்றுத் திறனாளி தாரணி மனு அளிக்க பெற்றோர்களுடன் நின்று கொண்டிருந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டிருந்த இருந்த அந்த பெண்ணை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்துவிட்டு உடனே ரசிகர் மன்றத்தினரை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு அவரை அழைத்து குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது டிப்ளமோ இசிஇ படிப்பு படித்திருக்கும் மாற்றுத்திறனாளியான அவருக்கு குடும்பத்தின் வறுமையைபோக்க அரசு வேலை வழங்க வேண்டும் என மனு அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். ரசிகர் மன்றத்தினரின் வரவேற்பையும் பொருட்படுத்தாமல் மாற்றுத்திறனாளி பெண்ணின் குறையை கேட்டு சென்ற அமைச்சரின் செயல் அங்கு கூடியிருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.