28 ஆண்டுகளுக்குப் பிறகு..! முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின்!

28 ஆண்டுகளுக்குப் பிறகு..! முப்பெரும் விழாவிற்கு வருகை தந்த மு.க.ஸ்டாலின்!

 மு.க.ஸ்டாலின்

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி, தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு வித்திட்ட தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என முப்பெரும் விழா, கோவை கொடீசியா மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதய நிதி ஸ்டாலின், அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற எம்.பிக்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சியினர் பங்கேற்கின்றனர்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் திமுக நேரடியாக வென்றுள்ள நிலையில் இந்த முப்பெரும் விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்திற்குள் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மதிவேந்தன், ராமச்சந்திரன் மற்றும் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில், கோவை மக்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story