வரவேற்பின் போது திருத்தணி எம்எல்ஏ காயம் - உதயநிதி நலம் விசாரிப்பு
நலம் விசாரித்த உதயநிதி
சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் பாசறை பயிற்சி கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்கவில்லை. காணொலி வாயிலாக மட்டுமே அவர் வாக்குச்சாவடி முகவர்களுடன் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க சால்வை போட்டபோது திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான சந்திரனின் கை அருகில் இருந்த மின் விசிறியில் தவறுதலாக பட்டதில் வலது கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவமான சந்திரனுக்கு கை விரைலில் சுமார் 10 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை திமுக இளைஞரணி தலைவரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல்நலம் தேறி வர நம்பிக்கை கூறினார். அவருடன் அமைச்சர்கள் பி. கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், எம் எல் ஏக்கள் ஆவடி சா.மு.நாசர்,வி.ஜி ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நலம் விசாரித்து, விரைவில் குணமாக நம்பிக்கை கூறினர்.