மறைமுக பிரசாரம் செய்கிறார் மோடி - செல்வப்பெருந்தகை!

மறைமுக பிரசாரம் செய்கிறார் மோடி - செல்வப்பெருந்தகை!

செல்வப்பெருந்தகை

விவேகானந்தர் தவமிருந்த பாறையில்தான் நரேந்திர தாமோதரதாஸ் மோதி என்ற பிரதமர் நரேந்திர மோடியும் நாளை முதல் 3 நாட்கள் தவமிருக்கிறார்- தியானம் மேற்கொள்கிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜூன்-4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன.

தேர்தல் பரப்புரை நிறைவடையும் மே 30 ஆம் தேதி மாலையில் தியானத்தை தொடங்கும் மோடி ஜூன் 1 ஆம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வரும் வரை தமிழ்நாட்டில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதில், "வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.'' என பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story