மோடி இந்தியாவின் ஹிட்லர் : முத்தரசன்.

மோடி இந்தியாவின் ஹிட்லர் : முத்தரசன்.

முத்தரசன் தேர்தல் பிரசாரம்  

ஜெர்மனியின் ஹிட்லர் போன்று இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் முடக்கி வருகிறார் மோடி. இந்தியாவின் ஹிட்லர் போன்று செயல்படும் இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து தேர்தலே இருக்காது. எனவே, இந்தத் தேர்தல் யுத்தத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திமுக வேட்பாளர் ச.முரசொலியை ஆதரித்து புதன்கிழமை இரவு பிரசாரம் செய்த அவர் மேலும் பேசியது: சர்வாதிகாரம், பாசிசத்துக்கு எதிரான போர் நடக்கிறது. இதில், இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது. நம் நாட்டின் ஜனநாயகத்தை, மதச்சார்பின்மையைக் காப்பாற்றும் பொறுப்பை இந்தியா கூட்டணி ஏற்றுள்ளது. தமிழ்நாட்டுக்கு மோடி எத்தனை முறை வந்தாலும், மக்கள் ஏமாறமாட்டார்கள். அவர் ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தியா கூட்டணிக்கான வாக்கு வங்கி விகிதம் அதிகரித்து வருகிறது.

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது எனக் கேட்டால், கச்சத்தீவு பிரச்னையை பேசுகிறார் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த மோடி கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், இப்போது பிரச்னைகளை திசை திருப்புவதற்காக பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டம் முழுவதையும் மோடியும், அமித்ஷாவும் மீறுவது மட்டுமல்லாமல், அதை சீரழித்துவிட்டனர். அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றில் பணியாற்றுபவர்களைத் தங்களது வீட்டு ஏவலாளிகளைப் போன்று பயன்படுத்துகின்றனர்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டனர். ஜெர்மனியின் ஹிட்லர் போன்று இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இருக்கக்கூடாது என்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் முடக்கி வருகிறார் மோடி. இந்தியாவின் ஹிட்லர் போன்று செயல்படும் இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து தேர்தலே இருக்காது. எனவே, இந்தத் தேர்தல் யுத்தத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார் இரா.முத்தரசன்.

இக்கூட்டத்தில், தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story