மீண்டும் மோடி எதிர்ப்பலை... எங்கும் கோ பேக் மோடி!

மீண்டும் மோடி எதிர்ப்பலை... எங்கும் கோ பேக் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் Go Back Modi என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. அதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளும் வகையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இரண்டு நாள் தியானத்தில் ஈடுபடுகிறார். இதையொட்டி பிரதமர் மோடி இன்று மாலை 4 .35 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 45 மணி நேரம் தியானத்தை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார். இதையொட்டி அங்கு கடற்படையினர் மற்றும் 11 எஸ்பிக்கள் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த இரு நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், பிரதமரின் கன்னியாகுமரி வருகையையொட்டி 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை செல்லவும், சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவையும் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டன. மேலும் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலின் இறுதி கட்ட மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், பிரதமர் மோடி தியானம் என்ற பெயரில் மறைமுக பிரசாரம் செய்ய இருப்பதாக குற்றம்சாட்டி இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு வருகையை எதிர்த்து சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள #GoBackModi போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"ஒடிசா தேர்தல் பரப்புரையில் தமிழர்களை இழிவுபடுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கே வருவதா?" என போஸ்டருக்கு தலைப்பிட்டு அத்துடன், #GOBACKMODI, இந்திய தேர்தல் ஆணையமே தூங்காதே என்றும், Hello Netizens..! Ready Start 1 2 3" என்றும் Twitter Trending-க்கு அழைப்புவிடும் வகையிலும் போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன.

Tags

Next Story