வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும் பிரதமர் மோடியின் குமரிப் பயணம்!

வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும் பிரதமர் மோடியின் குமரிப் பயணம்!

பிரதமர் மோடியின் குமரிப் பயணம் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


பிரதமர் மோடியின் குமரிப் பயணம் சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகளின் நலனைப் பாதிக்கும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வருகை தந்து தியானம் செய்யவுள்ளதாகவும், இதனால் மே 30 முதல் ஜூன் 01 வரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கோடை விடுமுறைக்காக நாடு முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய இடமாக கன்னியாகுமரி உள்ளது.

சூரிய உதய தரிசனம் அங்கு முக்கியமானது என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலையிலேயே அங்கு வருகை தருகின்றனர். மேலும், அங்குள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் முக்கியமாக செல்லும் இடங்களாகும். மோடியின் இந்த 3 நாள் பயண நிகழ்ச்சியால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி படகு குழாம் தொடங்கி அனைத்துப் பகுதிகளிலும் 4000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் வருவதற்கு முன்பாகவே அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்வாதாரத்தை அமைத்துள்ள வியாபாரிகளும், மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்சியிலிருந்த போதும் நாட்டு மக்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி, ஆட்சியை விட்டு போகும் போதும் நாட்டு மக்களுக்கு துன்பம் தரும் நிகழ்ச்சி நிரலையே நிகழ்த்தி காட்ட இருக்கின்றார். நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்கான எந்த ஒரு செயலையும் செய்யாத பிரதமர் மோடி, சுற்றுலாப் பயணிகளின் சந்தோசத்தையும் தடுத்துள்ளார்.

இது கண்டிக்கத்தக்கது.பிரதமருக்காக 3 நாட்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்புடையதல்ல. மட்டுமின்றி, தியானம் மூலமாக மோடி தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் செயல் என்பதால், இது தேர்தல் விதிமீறல் நடவடிக்கையாகும். ஆகவே, இந்நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story