தமிழகத்தில் தொழில் முன்னோடிகள் திட்டத்தால் 1,300-க்கும் மேற்பட்டோர் பயன்!
தொழில் முன்னோடிகள் திட்டம்
தமிழ்நாடு அரசின் கடன் மானியத் திட்டத்தால் 1,300-க்கும் மேற்பட்ட SC, ST தொழில்முனைவோர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை 1,303 SC, ST தொழில்முனைவோர்கள் சுமார் ரூ.134.86 கோடி மதிப்பிலான முதலீட்டு மானியத்தை பெற்றுள்ளனர்.
SC, ST தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2023 மே மாதம் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' கொண்டுவரப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், SC, ST சமூகத்தைச் சேர்ந்த 55 வயதுக்கு உட்பட்டவர்கள், புதிதாகத் தொழில் தொடங்க, 1.5 கோடி ரூபாய் வரை கடன் பெறாலாம். தொழில்முனைவோரின் தொழில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35% முதலீட்டு மானியம் (Capital Subsidy) வழங்கப்படும் என்ற நிலையில், இதுவரை ரூ.134.86 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக தொழில் தொடங்க வங்கியில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் 6% வட்டியை அரசே வங்கியில் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.