ஆஞ்சநேயர் சாமி திருக்குட பெருவிழா - ராஜேஸ்குமார் எம்.பி அறிவுரை

ஆஞ்சநேயர் சாமி திருக்குட பெருவிழா - ராஜேஸ்குமார் எம்.பி அறிவுரை

முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

நாமக்கல் ஆஞ்சநேய சாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழாவின் போது மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ராஜேஷ்குமார் எம்.பி அறிவுரை வழங்கினார்.
ஆஞ்சநேயர் சாமி திருக்குட பெருவிழா - இராஜேஸ்குமார் எம்.பி அறிவுரை நாமக்கல், அக் 20 - நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், இராஜேஸ்குமார் எம்.பி கூறும்போது, அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயிலின் உபகோவிலான அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு விழா 30.10.2023 முதல் 01.11.2023 வரை நடைபெற உள்ளது. 30.10.2023 முதல் யாகசாலை துவங்கப்பட்டு, 31.10.2023 மாலை வரை நடைபெறும். 01.11.2023 அன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை திருக்குடமுழுக்கு நடைபெறும். அதுசமயம் சுமார் 80,000 பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு விழா நடைபெறும் போது பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய இவ்வாண்டு சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதைகளை போக்குவரத்திற்கு இடர்பாடின்றி ஒழுங்கு செய்திடவும், வாகனங்கள் தடையின்றி செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பக்தர்களின் வருகையை சீர்படுத்த தன்னார்வலர்களை பயன்படுத்த வேண்டும். விழா நாளுக்கு முன்பும், விழா நாளன்றும் மேற்படி சன்னதிகளில் கிருமி நாசினிகளை பயன்படுத்தி சுகாதாரமான முறையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி மேற்கொள்ள வேண்டும். ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். விழா அன்று பக்தர்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் முன் 108 ஆன்புலன்ஸ் சேவையுடன் காலை 3 மணி முதல் அமைத்தல் மற்றும் முதலுதவி வசதிகள் வைத்திருக்க வேண்டும். யாகசாலை நடைபெறும் பொழுது தயார் நிலையில் தீயணைப்பு வாகனத்தினை நிறுத்தி வைத்து தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், திருக்குட முழுக்கு விழா நடைபெறும் 2 நாளும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு தற்காலிக கழிப்பறை வசதியினை ஏற்படுத்தி தர வேண்டுமென கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார். இக்கூட்டத்தில், நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி, உதவி ஆணையர் இரா.இளையராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், அறங்காவலர் குழுத் தலைவர் கா.நல்லுசாமி, அறங்காவலர்கள் செல்வசீராளன், ஸ்ரீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ் பாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story