நிலமோசடி வழக்கில் கைதான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது !
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலியாக பத்திரப் பதிவு செய்தது, கொலை மிரட்டல் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்மீது கரூர் எஸ்.பி மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைஒயடுத்து 14 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸ் கேரளாவில் பதுங்கியிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரைக் கைது செய்தது. சுமார் 40 நாள்களாக ஜாமீன் கேட்டும் தலைமையிடம் உதவிகேட்டும் சுற்றித் திரிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
இதையடுத்து அவரை கேரளாவில் இருந்து கரூருக்கு அழைத்து வந்து, கரூர் காந்தி கிராமத்தில் உள்ள சிபிசிஐடி காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின் அவரை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நீதிபதி பரத்குமார் முன் ஆஜர்படுத்தினர். அவரை ஜூலை 31-வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் சேலம் மத்திய சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், வாங்கல் போலீஸார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்வதற்காக கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகசுந்தரத்திடம் அதுதொடர்பான ஆவணங்களை காட்டி அனுமதி பெற்றனர். இதைத் தொடர்ந்து வாங்கல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உத்தரவை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் வழங்கி கையெழுத்து பெறுவதற்காக வாங்கல் போலீஸார் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.