முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; கேரள அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து எல்லையோரத்தில் விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணை. 128 ஆண்டுகள் பழமையான இந்த அணை பலவீனமாக உள்ளது என் கேரள அரசு பல ஆண்டுகளாக பொய் பிரச்சாரங்களை பரப்பி வருகிறது.. இது மட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக அணையில் இருந்து வல்லக்கடவு செல்லும் பாதையில் 366 மீட்டரில் புதிய அணைக்கான இடம் தேர்வு செய்தது மட்டுமல்லாமல் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

புதிய அணை கட்டுவதற்கான மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு அளித்த விண்ணப்பம் வரும் நாளை (மே 28) ஆம் தேதியன்று நிபுணர் மதிப்பீட்டு குழுவின் பரிசீலனைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்நடவடிக்கையை கண்டித்தும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கோரளாவின் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கையை நிராகரிக்க கோரி விவசாய சங்கங்கள் தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரள எல்லையான குமுளியில் முற்றுகையிடுவதற்காக லோயர்கேம்ப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமாக சென்றவர்களை பென்னிகுயிக் மணிமண்டபம் அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடந்து விவசாய சங்கத்தினர் மணிமண்டபம் பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக ஏறாளமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Tags

Next Story