ஓசூர் பகுதியில் பல்நோக்கு சரக்கு முனையம் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஓசூர் பகுதியில் பல்நோக்கு சரக்கு முனையம் -  அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய ரயில்வே துறை  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

ஓசூர் பகுதியில் பல்நோக்கு சரக்கு முனையம் அமைக்கப்படும், தமிழகத்தில் 75 ரயில் நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என ஓசூரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மத்திய ரயில்வே துறை மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இன்று பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஓசூருக்கு வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து அவர் காரில் ஓசூர் அருகே இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைக்கு சென்றார். டாடா தொழிற்சாலையில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கப்படும் பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து காரில் ஓசூர் ரயில் நிலையத்திற்கு வந்த மத்திய அமைச்சர் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு அப்போதைய மத்திய அரசு தமிழக ரயில்வே துறைக்கு 5 ஆண்டுகளில் வெறும் 879 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் தமிழக ரயில்வே துறைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கடந்த ஓராண்டில் தமிழக ரயில்வே துறை வளர்ச்சிக்காக 6,080 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது.தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாம்பல்பட்டி மற்றும் அரக்கோணம், ஆவடி, அம்பத்தூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 75 ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஓசூர் ஜோலார்பேட்டை இடையேயான ரயில் சேவை திட்டமானது நீண்ட நாட்களாக பொதுமக்களால் கேட்கப்படும் ஒரு திட்டமாகும், இந்த திட்டத்தை செயல்படுத்த பல இடங்களில் குகைகள் அமைக்க வேண்டும், எனவே இந்த திட்டத்திற்கான மதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே திட்ட மதிப்பீட்டை குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் விரைவில் இந்த திட்டம் செயல் வடிவம் பெறும் என தெரிவித்தார்.

ஓசூர் பகுதியில் பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைக்க புதிதாக திட்டமிட்டுள்ளோம், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தொழில் நகரமான ஓசூரில் சரக்கு போக்குவரத்து அதிகரித்து ஓசூரில் தொழில் வளர்ச்சி பல மடங்காக உயரும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு ரயில் மூலம் பெங்களூரு சென்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி நரசிம்மன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான கட்சியினர் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.

Tags

Next Story