ரவுடி லிங்கம் கொலை வழக்கில் தேடப்பட்டவர் 27 ஆண்டுகளுக்கு பின் கைது
செல்வம்
கன்னியாகுமரி அருகே நாச்சியார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லிங்கம். பிரபல ரவுடியான இவருக்கும், மற்றொரு தரப்பு ரவுடியான பிரபு என்பவருக்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் இருதரப்பை சேர்ந்த சிலர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதற்கிடையே போலீசார் ஒரு வழக்கில் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் ரவுடி லிங்கத்தை அடைத்திருந்தனர். இந்தநிலையில் 1996-ம் ஆண்டு லிங்கம் இருந்த சிறைக்குள் ஒரு கும்பல் புகுந்து அவரை கொடூரமாக கொன்றது. அவருடைய தலையை மட்டும் துண்டித்து நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அண்ணா பஸ் நிலைய பகுதியில் வைத்து விட்டு தப்பி ஓடியது. சிறைக்குள் புகுந்து தலை துண்டிக்கப்பட்டு ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் குமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தையே உலுக்கியது. அந்த காலக்கட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் மொத்தம் 36 பேர் மீது நேசமணிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் நாகர்கோவில் புதுக்குடியிருப்பு மேல காமராஜர்புரத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 55) என்பவரும் ஒருவர். இவர் இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அதன்பிறகு அவர் போலீசாரின் கண்ணில் சிக்கவில்லை. இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பும் கூறப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால் செல்வம் மட்டும் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல், கடந்த 27 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்து வந்தார். அதனால் பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டு இருந்தது. இவர் மீது வடசேரி போலீஸ் நிலையத்திலும் சில வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளிலும் செல்வம் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்ட செல்வம் சென்னையில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. பூந்தமல்லி பகுதியில் பதுங்கியிருந்த செல்வத்தை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட செல்வம் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட செல்வத்தை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.