எந்த இடத்திலும் என்னுடைய 'சுய மரியாதை'யை விட்டுக் கொடுப்பவன் அல்ல: இளையராஜா

எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல: இளையராஜா

ilayaraja

தன்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருவதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அவரது பதிவில், "என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story