மாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் நூதனமாக தகவல்

சாத்தான்குளம் அருகே மாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் நூதனமாக தகவல் தெரிவித்து மாட்டை விட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் பட்டுராஜ். விவசாயியான இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது 2 பசுமாடுகள் கடந்த 2நாள்களுக்கு முன்பு திடீரென திருட்டு போனது. இதனையடுத்து பட்டுராஜ் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சி பதிவு ஆய்வு நடத்தினார்.

மேலும் வள்ளியூர், மேலப்பாளையம் மாட்டுச் சந்தைக்கு சென்று தனது மாடுகளின் புகைப்படத்தை காண்பித்து யாரும் கொண்டு வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்துள்ளார். ஆனால் மாடுகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடி வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை பட்டுராஜ் வழக்கம்போல் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது தோட்டத்தின் வாசலில் இருந்த வேலியில் ஒரு அட்டையில் "உங்களது மாடு சங்கரன்குடியிரப்பு கெபி அருகே உள்ள புளியமரத்து அடியில் கட்டப்பட்டுள்ளது. இட்டமொழி கிழக்கு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பட்டுராஜ், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனனுக்கு தகவல் தெரிவித்து அவருடன் சென்று சங்கரன்குடியிருப்பு கெபியில் மாடுகளை தேடினார்.

அப்போது அங்கு அவரது 2 மாடுகளும் கட்டப்பட்டிருந்ததை கண்டு மாடுகளை அவிழ்த்து தனது தோட்டத்திற்கு கொண்டு வந்தார். மாடுகளை பட்டுராஜ் தீவிரமாக தேடி வருவதை அறிந்த திருடர்கள் அட்டையில் மாடு இருக்கும் இடத்தின் விவரத்தை எழுதி வைத்து விட்டு மாடுகளை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story