நாகை எம்.பி செல்வராஜ் மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினருமான செல்வராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். 1975-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த திரு. செல்வராஜ் அவர்கள் சுமார் அரைநூற்றாண்டு காலம் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தவர் ஆவார்.
செல்வராஜ் அவர்கள் நான்கு முறை நாகை மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கு இரயில்வே திட்டங்கள் வேண்டியும், அப்பகுதி வேளாண் பெருங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை செல்வராஜ் அவர்கள் முன்னெடுத்துள்ளார்.
என் மீது கொள்கைரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும், இருவரும் டெல்டாகாரர்கள் என்ற வகையிலும் மிகுந்த பாசமும் நன்மதிப்பும் கொண்டவர் செல்வராஜ் அவர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம்தான் திரு. செல்வராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றியிருந்தேன். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் அவர்களது மறைவு பொதுவுடைமை இயக்கத்துக்கும், டெல்டா மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், நாகை தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.