நிர்வாணமாக்கி இளைஞர் தாக்குதல்? நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல்
பட்டுக்கோட்டை அருகே இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கிய மர்மநபர்களை கைது செய்யாத காவல்துறையினரைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் விக்னேஷ் (32); சொந்தமாக டெம்போ லோடு வாகனம் வைத்து, வாடகைக்கு ஓட்டி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 23ம் தேதி, கீழக்குறிச்சியை சேர்ந்த சிலருக்கும், பரவாக்கோட்டையைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, இரண்டு கிராமத்தை சேர்ந்த பெரியோர்கள் பேச்சுவார்த்தை மூலம், பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதைதொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, விக்னேஷை மர்ம நபர்கள் சிலர், கடத்திச் சென்று நிர்வாணமாக்கி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மதுக்கூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையினர் இதுவரை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை எனக்கூறி, புதன்கிழமை காலை விக்னேஷின் உறவினர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான, காவல்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்ட நிலையில், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பட்டுக்கோட்டை- மன்னார்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.