நாமக்கல் கவிஞர் திருவுருவப்படத்திற்கு இராஜேஸ்குமார் எம்.பி மலர்தூவி மரியாதை

நாமக்கல் கவிஞர்  திருவுருவப்படத்திற்கு இராஜேஸ்குமார் எம்.பி  மலர்தூவி மரியாதை

நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் 

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் 135வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு இராஜேஸ்குமார் எம்.பி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில், அவரின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் மார்பளவு சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டனர். இது குறித்து கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் 135-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவர்களின் நினைவு இல்லத்தில் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினோம். நாமக்கல் கவிஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டடத்திற்கு நாமக்கல் கவிஞர் மாளிகை என முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் பெயர் சூட்டப்பட்டது. மேலும், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் அன்னாரது மார்பளவு சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கவிஞர் அவர்களின் வாரிசுதாரர்கள் அன்னாரின் நினைவு இல்லத்தில் சிலை அமைக்க கோரிக்கையை ஏற்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அவரது சீரிய முயற்சியின் காரணமாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அன்னாரது மார்பளவு சிலை அமைக்க நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படவுள்ளது. நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் கவிஞரின் மார்பளவு சிலை அமைக்க வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் நிதி ஒப்பளிப்பு செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு நாமக்கல் கவிஞர் வாரிசுதாரர்களின் சார்பிலும், பொதுமக்களின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் து.கலாநிதி, துணைத் தலைவர் செ.பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் திரு.சரவணன், சிவக்குமார், நாமக்கல் கவிஞரின் மகன் வழி பேரன் பழனியப்பன், மகள் வழி பேரன் அனுமந்த பாண்டியன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story