நாங்குநேரி சாதிவெறி தாக்குதல் -தாக்கப்பட்ட மாணவரை நேரில் சந்தித்த கல்வித்துறை அமைச்சர்

நாங்குநேரி சாதிவெறி தாக்குதல் -தாக்கப்பட்ட மாணவரை நேரில் சந்தித்த கல்வித்துறை அமைச்சர்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

சக மாணவர்களின் சாதி வெறி தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த அம்பிகாவதி என்பவரின் மகன் வள்ளியூர் அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரென்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆக.9ம் தேதி சக மாணவர்கள் மூன்று பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அம்பிகாவதியின் வீட்டிற்குள் நுழைந்து அவரது மகனை சரமாரியாக வெட்டினர்.தடுக்க சென்ற மாணவனின் தங்கையையும் வெட்டி விட்டு அக்கும்பல் தப்பி ஓடியது. விசாரணையில் சாதிய பிரச்னையால் அம்பிகாவதி மகனை அவனுடன் படித்து வரும் சக மாணவர்களே கொடூரமாக வெட்டியதாக கூறப்பட்டது. எனவே இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.குறிப்பாக பாதிக்கப்பட்ட மாணவனை உயர் சாதியை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் அதை மாணவன் மற்றும் அவனது தாய் அம்பிகாவதி பள்ளி நிர்வாகத்திடம் புகாராக தெரிவித்த காரணத்தினால் தான் சக மாணவர்கள் திட்டமிட்டு இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை முயற்சி உள்பட பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மாணவர்கள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பதால் அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் சாதிய பிரச்னை மீண்டும் தலை தூக்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சாதி பிரச்னையை மையமாக வைத்து பல கொலைகளும் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் சூழலில் புத்தகம் சுமக்க வேண்டிய கைகளில் மாணவர்கள் அரிவாளை பிடித்து சாதிய வன்மத்தை கட்டவிழ்த்து விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது தங்கை இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருநெல்வேலிக்கு வருகை தந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீரென சத்தமில்லாமல் பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவன் மற்றும் அவனது தங்கை இருவரையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.பின்னர் மாணவனின் தாய் அம்பிகாவதிக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார் ஏற்கனவே இச்சம்பவம் நடைபெற்றபோது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் நாங்குநேரி சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு மாணவனின் கல்வி செலவை ஏற்பதாகவும் உருக்கமாக பேசியிருந்தார்.இதுபோன்ற சூழலில் சம்பவம் நடைபெற்ற பிறகு முதல் முறையாக திருநெல்வேலி வருகை தந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாங்குநேரி மாணவனை நேரில் சந்திந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags

Next Story